கொரோனா தடுப்பூசி போட்டபின்பும் சிலருக்கு கொரோனா பாதிப்பது ஏன்? நீங்கள் அறிய வேண்டிய முக்கிய உண்மை

Covid 19

0
279
corona_awareness

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கூட கோவிட்-19 தொற்று சிலருக்கு ஏற்படுகிறதே.

அப்படி என்றால் கொரோனா தடுப்பூசி உண்மையில் வேலை செய்கிறதா? அந்த மருந்தின் வெற்றி தன்மை என்ன, என்ற கேள்வி பொதுவாக எழும். அப்படிப்பட்ட முக்கியமான கேள்விக்கு மருத்துவர்கள் கூறிய பதில்களை இங்கே பார்ப்போம்.

தற்போது கொரோனா தடுப்பூசி குறித்து பொது வெளியில் முரண்பாடான சில கருத்துக்கள் வேகமாக பரப்பப்படுகின்றன, இதனால் மக்களுக்கு உண்மை என்னவென்று தெரியாமல் தடுப்பூசியை நிராகரிப்பது அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டால் உயிருக்கு ஆபத்து என்று அச்சப்படுவது அதிகமாக நடக்கிறது.

இந்திய நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி இனி வரும் நாட்களில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ளதால் நமது மக்கள் தடுப்பூசி குறித்து அறிய வேண்டிய உண்மைகளை இப்போது பார்ப்போம்.

என்ன நடந்தது அவருக்கு?

மருத்துவர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார். இரண்டு டோஸ் போட்டும் அவருக்கு கொரோனா பாதித்து இருக்கிறது.

கொரோனா தடுப்பூசி போட்டாலும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்த மருத்துவர் உடனடியாக ராபிட் ஆன்டிஜென் சோதனை செய்தார்.

அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆனது. இதை அடுத்து தன்னை தனிமை படுத்திக் கொண்ட அவர், மருத்துவர் என்பதால் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார்.

மார்பு பகுதியில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரியவந்தது. காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு இருந்தது. அவரது வெப்பநிலை 99-100 டிகிரி வரை இருந்துள்ளது. அதன்பிறகு காய்ச்சலும் நின்றுவிட்டது.

அடுத்த இரண்டு நாளில் அவருக்கு மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா இல்லை என்பது உறுதியானது.

கொரோனா தடுப்பூசி அபாயத்தை குறைத்துள்ளது?

இதை சொல்ல காரணம் என்னவென்றால். ஒரு வேளை அவர் தடுப்பூசி எடுத்து கொள்ளாமல் இருந்திருந்தால், அவருக்கு கடுமையான தொற்று ஏற்பட்டிருக்கலாம்,

கொரோனா காரணமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை வந்திருக்கலாம். உயிரிழக்கும் அபாயமும் இருந்திருக்கலாம் என்று அந்த மருத்துவரே உறுதியாக நம்புகிறார்.

ஏனெனில் மருத்துவர்களின் கூற்றுப்படி அவர் கொரோனா தடுப்பூசி போட்டதால் லேசான பாதிப்புடன் தப்பியுள்ளார். தடுப்பூசி போடாமல் இருந்திருந்தால் கடும் பாதிப்புகளை சந்தித்து இருக்கக்கூடும்.

தாக்க வாய்ப்பு உள்ளது?

இது பற்றி பிரபல தனியார் செய்தி நிறுவனத்தில் தமிழில் வெளியான செய்திகளின் படி, மருத்துவர்களின் அறிவுரைகளை இப்போது பார்ப்போம்.

எல்லோருக்கும் ஒரு சந்தேகம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா பாதிப்பு வருமா என்ற கேள்வி இருக்கும்.

இதற்கு மருத்துவர்கள் கூறுகையில், இரண்டு சுற்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது என்பது உண்மை ஆனால், இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது.

எந்தவொரு தடுப்பூசி உற்பத்தியாளரும் இதுவரை 100% செயல் திறன் இருப்பதான தரவை முன்வைக்கவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின், 80 சதவிகித செயல்திறன் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது அதைப் பயன்படுத்திய பிறகு உங்களுக்கு கொரோனா ஏற்பட 20 சதவிகித வாய்ப்பு உள்ளது.

கோவிஷீல்டின் செயல்திறன் 70% எனக் கூறப்படுகிறது. கோவிஷீல்டின் செயல்திறன் இரண்டு டோஸ்களின் இடைவெளியிலும் மாறுகிறது.

28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டால் சற்று குறைவான செயல்திறனும் இரண்டு மாத இடைவெளியில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டால் செயல்திறன் அதிகமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியால் என்ன பலன்?

தடுப்பூசி போட்டால் என்ன ஆகும். கொரோனாவின் தீவிரம் இருக்குமா என்று மருத்துவர்களிடம் கேட்ட போது, தடுப்பூசிக்குப் பிறகு கொரோனாவின் தீவிரம் அதிகம் இருக்காது. உயிருக்கு ஆபத்து ஏற்படாது. லேசான அல்லது அறிகுறி இல்லாத கொரோனா தாக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன், நமது உடலில் மெமரி செல்கள் உருவாகின்றன, கொரோனாவுக்கு எதிராக எவ்வாறு போராட வேண்டும் என்பதை இவை நினைவில் கொள்கின்றன. வைரஸ் உங்களைத் தாக்கியவுடன், அவை உடனடியாக வேலை செய்யத் தொடங்குகின்றன. எனவே, தடுப்பூசிக்கு முன்னும் பின்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போதும் தனி நபர் இடைவெளி, முகக்கவசம், கை கழுவுதல் ஆகியவை பின்பற்றப்பட வேண்டும் என்கிறார்கள்.

அரசு முன்னுரிமை ஏன்?

45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி அளிக்க அரசு முன்னுரிமை அளிக்க காரணம் இருக்கிறது. ஏனெனில் தடுப்பூசி அவர்களுக்கு ஒரு சிறந்த வழியாகும்.

45 வயதை கடந்த பலருக்கு சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா போன்ற இணை நோய்கள் ( கோமார்பிடிட்டி) இருக்கும். அவர்களுக்கு தடுப்பூசி இல்லாமல் லேசான கொரோனா தாக்கினால் கூட தீவிரம் அதிகமாக இருக்கக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எனவே தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், அவர்களுக்கும் லேசான தொற்று மட்டுமே இருக்கும், அதை எதிர்த்துப் போராட உடலில் ஆன்டிபாடிகள் இருக்கும். இதன் காரணமாக, தடுப்பூசி பெறுவதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மக்களே தடுப்பூசியை புறக்கணிக்க வேண்டாம். அது இப்போது முக்கியம் , அதைவிட முக்கியம் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவது தான். பொருளாதாரத்தை சீரழிக்ககூடிய முழு லாக்டவுனை அனுமதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டது.

எனவே மக்கள் இனி கவனமாக இருக்க சமூக இடைவெளியை பின்பற்றுவதும், முககவசம் அணிவதும்தான் ஒரே தீர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here